பக்கம் எண் :

345

10. திருமங்கலக்குடி

பதிக வரலாறு:

     திருக்கஞ்சனூர், திருமாந்துறை இரண்டையும் வழிபட்டு மீண்டும்
திருமங்கலக்குடியை யடைந்து பாடியது இத்திருப்பதிகம்.

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 146   பதிக. எண்: 10

திருச்சிற்றம்பலம்

1569.



சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி
நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே,     1


     1. பொ-ரை: மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம்
ஆகியனவற்றை வாரிக்கொண்டு வரும் நீரை உடைய பொன்னி நதியின்
வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப்
பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்ட கையால்
கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம்
புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று
வீ்ற்றிருந்தருள்கின்றான்.

     கு-ரை: சீர்-கனம், புகழ், மணியும் அகிலும் சந்தனமும் மிக்குள்ள
மலை. சந்து-சந்தனம். வரை-மலை. வாரி-வெள்ளம். பொன்னி-காவிரி.
பொன்னி வடமங்கலக்குடி-ஆற்றின் வடகரையிலுள்ள தலம். இத்தலத்தில்
வாழ்ந்த முனிவர் ஒருவர் சிவபூஜைக்குரிய திருமஞ்சனநீரை
அமர்ந்தவண்ணமே திருக்கைகளை நீட்டி, ஆற்றுநீரை முகந்து அபிடேகம்
புரிந்தார் என்பது வரலாறு. அவ்வுண்மையை முதற்றிருப்பாட்டில்
உணர்த்தியருளியதால் ஆசிரியர் திருவுள்ளக் கிடக்கையில் அது முந்தி
நின்றவாறறியலாம். ஆற்றினளவும் நீண்டதால் ‘நெடுங்கை’ என்றார்.
பூரித்து-நிறைத்து. ஆட்டி-அபிடேகித்து, அர்ச்சிக்க-அருச்சனைபுரிய.
புராணன்-முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள், பின்னைப்
புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன் என்னும் இருபொருளும் தருமாறு
பிரிக்கப்படும் வடசொல்.