பக்கம் எண் :

346

1570.



பணங்கொ ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே
மணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.        2
1571.



கருங்கை யானையி னீருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.      3


     2. பொ-ரை: ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய
மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள்
ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக் குடியில் தம்முள் மாறுபடும்
செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும்
வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான்
திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.

     கு-ரை: பணம்-அரவின் படம். நல்லார்-பெண்டிர். மணம் கொள்
பொழில்-வாசனை கொண்ட சோலை. ஆலும்-ஆடும். இணங்கிலா
மறையோர் என்பதிலும், இணங்கிலாமை மறைகட்குரிய
அடைமொழியேயாகும். மறைகள் மெய்ப்பொருளை அறிந்து இணங்காதன.
ஆரணம் அறியா அரும்பெருங்கடவுள் பரமசிவன் என்பதும் அவன்
‘இணங்கிலி’ (திருவாசகம். 389.) என்பதும் பிரசித்தம். இமையோர்-
இமைகொட்டாத வானோர். விழித்தகண் குருடாய்த் திரிவீரராகிய
யோகியருமாம். அணங்கு- உமையம்மையார், சரண்-கதி, புகல்.

     3. பொ-ரை: கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த
தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும்
பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை
மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை
அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.

     கு-ரை: கருங்கை-பெரிய துதிக்கை. கருமையை யானைக்குச் சேர்த்து
நிறத்தைக் கொள்ளலும் ஆம். ஈர் உரி - ஈர்ந்த தோல். வினைத்தொகை.
இத்தொடரின் உண்மைக் கருத்து ஆணவ மலத்துட்படும்