பக்கம் எண் :

352

11. சீகாழி

பதிக வரலாறு:

     137ஆவது பதிகத் தலைப்பிற் காண்க.

                     பண்: இந்தளம்

ப.தொ.எண்: 147   பதிக எண்: 11

                     திருச்சிற்றம்பலம்

1580.



நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.      1
1581.

நம்மான மாற்றிந மக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுட னாடல்பு ரிந்தானை


     1. பொ-ரை: நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடு
இயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக்
கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன்
வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில்
விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகை யோனை
ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.

     கு-ரை: நல்லான்-மங்களவடிவினன், சிவன். நான்மறை-சைவத்திற்கு
உரியனவாயிருந்த பழைய நான்கு மறைகள். “தத்து வாதீதமெனச்
சாற்றுங்காண் சைவமறை அத்துவா எல்லாம் அற” (துகளறுபோதம். 20)
ஆறு அங்கம்-சிக்ஷை. வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம். கற்பம்
என்பன., இவை சைவமறைக்கும் உரியன. ‘மறைகள்-வேதம்’. (தி.2 ப.12.
பா.7) வல்லான்-வன்மையுடைய சிவபிரான், வல்லவர்-வன்மையுடைய
அந்தணர். பால்-ஏழனுருபு. மலிந்து-நிறைந்து. சொல்லான்-துதிவடிவானவன்.
கோயிலாம் இல்லான்-கோயில் என்னும் பெயரினதாய வீட்டினன்.
நின்றார்-நிலைத்தவர். இன்பம் உளது; உளது-அழியாது என்றும் இருப்பது.

     2. பொ-ரை: நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும்
தலைவன். பேய்களோடு ஆடல் புரிபவன். அரிய வீரன்.