பக்கம் எண் :

359

12. திருக்கச்சியேகம்பம்

பதிக வரலாறு:

     வேதமோடு சைவநீதி விளங்கவந்த கவுணியனார் காஞ்சியை
அணைந்து, மதிற்புறத்தே சென்று சேர்ந்து வணங்கினார். அளவற்ற
தொண்டர்கள் அஞ்சலித்து வாழ்த்திய ஒலிவானளாவப் பெருகிற்று.
பூமாரியும், பொற்சுண்ணமும் புயல்போல் பொழிந்தன. காமக்கண்ணி
தழுவக் குழைந்த கச்சியேகம்பரை, உருகிய அன்பு உள்ளலைப்பப்
பருகிய மெய்யுணர் வினோடும் பாடியருளிய பதிகம் இது.

பண்: இந்தளம்

ப.தொ. எண்: 148 பதிக எண்: 12

திருச்சிற்றம்பலம்

1590.



மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.       1


     1. பொ-ரை: வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற்
பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான்
எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம்
என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம்
பிறவற்றை நினையாது.

     கு-ரை: மறையான்-வேதசொரூபன், வேதங்களை அருளியவன்
எனலுமாம். மாசு-குற்றம். புன்சடை-மென்மையையுடைய சடை. புன்மை.
பொன்மையுமாம். பிறையான்-பிறையை அணிந்தவன். பெண்ணும் ஆணும்
ஆகிய பெருமான். இறையான்-எப் பொருளினும் உறைவான். ஏர்-எழுச்சி.
அழகும் ஆம். கச்சி-சிவதலம், காஞ்சிபுரம், திருவேகம்பம்-அங்குள்ள
பெரிய சிவாலயம். திருவேகம்பத்து உறைவான்-திருவேகம்பம் எனப்
பெயரிய திருக்கோயிலுள் வாழ்பவன். உள்காது-எண்ணாது. ஏகம்பம்-
ஏகாம்ரம். ஏகாம்பரம். ஏகம்-ஒன்று. ஆம்ரம்-மாமரம்.