பக்கம் எண் :

360

1591.



நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.    2
1592.



பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதா ரின்பமா யந்நெறி சேராரே.           3


     2. பொ-ரை: நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி,
வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும்.
விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில்
எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல்
வரும் வினைகள் மெலியும்.

     கு-ரை: நொச்சியிலை, வன்னிபத்திரம், கொன்றைப்பூ, பிறை, கூவிளம்
(- வில்வம்) ஆகியவற்றைச் சிவபெருமான் முடியிற்புனைவது அவனது
திருவேடமாகும். ஊர்தி-வாகனம். எருது வாகனத்தன். கறை-(நஞ்சுண்டதன்
காரணமாகப் பொருந்திய அதன்) கறுப்பு. கண்டன்-திருக்கழுத்தினன். நச்சி
-விரும்பி. பக்தி கொண்டு.தொழுமின்-வழிபடுங்கள், நையும்-அழியும்.

     3. பொ-ரை: உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ்
ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய
கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர்
ஆவர். நும் வினை-உங்கள் கர்மம், மேல்வினை-ஆகாமியம்.

     கு-ரை: பார்-நிலம். ஆரும்-நிறைந்து முழங்கும். முழவம், மொந்தை,
குழல், யாழ் என்னும் இசைக்கருவிகளின் ஒலியும், சீரும், பாடலும், ஆடலும்
கச்சியுள் அக்காலத்தில் மிக்கிருந்த உண்மை புலனாகும்.

     சிதைவு-கேடு. ஏர்-எழுச்சி, அழகு. சேராதார்-இடைவிடாது
நினையாதவர். இன்பமாய நெறி-பேரின்பத்தை எய்துவதற்குரிய
நன்னெறியை (சன்மார்க்கத்தை). நகரமெய் விரித்தல். சேரார்-அடையார்.