பக்கம் எண் :

367

1603.



ஏதனை யேதமி லாவிமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.        3


கோழம்பத்தில் விளங்கும் செம்மையன.் தேன், நெய், பால் முதலியவற்றை
ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள்
மேவா.

     கு-ரை: மை-கருமை, மேகமும் ஆம். ஆன-ஆகிய, ஒத்த
கண்டனை -திருக்கழுத்துடையவனை. மறி-கன்று. கடி-மணம் பொழில்-
சோலை. செய்யான் -செந்நிலமுடையவன், செம்மையுடையவன், (தி.195. ப.59
பா.5.) ‘திருநின்ற செம்மை’ ‘செம்மையுள் நின்றவன்’ (சுந்தரர்) ‘செம்பொருள்’
தேன், நெய், பால் என்பன அபிடேகப் பொருள்களுள் அடங்கியவை,
திகழ்ந்து-விளங்கி. ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. மெய் - திருமேனி,
சத்தியமுமாம். மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர். மேவா-
அடையமாட்டா.

     3. பொ-ரை: நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம்
அற்ற இமையா நாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும்
வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன்.
விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை
உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின்.

     கு-ரை: ஏதன்-குற்றமுடையவன். ‘குற்றம்நீ குணங்கள்நீ கூடலால
வாயிலாய்’ (தி.3 ப.52 பா.3) என்று இவ்வாசிரியர் திருவாக்கேயிருத்தல்
அறிக. ஏதம்-குற்றம். காரணனுமாம். இமையோர் என்பதற்குத் தேவர் என்று
பொருள்கூறுவர். இது சைவநூல்கட்கு ஒவ்வாது. இமைத்தலில்லாதவர்-
இமையோர் என்னும் சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர். ‘இமையவர்க்கு
அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன்’
என்பதில் தேவர்க்கு அன்பன் எனல்பொருந்துமோ? கண்ணிமைத்துக்
காணாத யோகியர், விழித்தகண் குருடாத் திரி வீரர் என்பதே உண்மைப்
பொருள்.

     வேதன் - மறைகளை அருளியவன். வெண்குழை தோடு -
சங்கத்தோடுங் குழையும். நைய - வருந்த (நீங்க).