பக்கம் எண் :

368

1604.



சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை யுள்குமின் உள்ளங் குளிரவே.       4
1605.



காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.        5


     4. பொ-ரை: சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில்
விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன்.
வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில்
சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர
அவனை நினைவீர்களாக.

     கு-ரை: தண்மலரான்சிரம்-பிரமகபாலம், ‘வேத வேள்வி யை’
(நிந்தனை செய்துழல் ஆதமில்லி) (தி.3 ப.108 பா.1) என்றதறிக.

     நன்கு-நன்மை. உடையான்-உடையவன், சுவாமியும் ஆம். உள்கு மின்
-தியானம் புரியுங்கள்.

     5. பொ-ரை: மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும்
கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன்.
உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சி மிக்கவனாய் விளங்கும்
புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக்
கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள்.

     கு-ரை: காரான்-மேகமாயிருப்பவன். ‘கனத்தகத்தான்
கயிலாயத்துச்சியுள்ளான்’ போது-பூ. தார் - (மாலை, கண்ணி) தார்.
தையல்-பாலாம்பிகை. சீரான்-கனவான்.

     ஒல்க-சுருங்க. கோழம்பம் மேவிய ஊர் என்றதால் திருக்கோயிலின்
திருநாமம் கோழம்பம் என்க. கோழம் பங் கோயிலாகக் கொண்டான்’ என
மேல்வருதலும் காண்க.