1606.
|
பண்டாலின்
னீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புர மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமி னுள்ளங் குளிரவே. 6 |
1607.
|
சொல்லானைச்
சுடுகணை யாற்புர மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்ப மேவிய
நல்லானை யேத்துமி னும்மிடர் நையவே. 7 |
6.
பொ-ரை: முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம்
உரைத்தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின்
முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும்
திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர
அவன் புகழைக் கூறுங்கள்.
கு-ரை:
ஆல் - கல்லாலமரம். பரஞ்சோதி - மெய்யொளி.
விண்டார்கள் - பகைவராகிய திரிபுரத்தசுரர்கள். புரம் மூன்று - முப்புரம்.
கண்டான் - கண்டவன்; வினையாலணையும் பெயர்.
கூறுமின்
- புகழுங்கள். கடவுள் புகழை வாயாற் கூறுதல் உள்ளக்
குளிர்ச்சிக்குக் காரணம் என்றவாறு.
7.
பொ-ரை: எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான
கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன்.
வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை
உரித்து அதன் தோலைப் போர்த்தவன். திருக்கோழம்பத்தில் எழுந்தருளிய
மங்கல வடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக.
கு-ரை:
சொல்லான்-சொல்வடிவாகிய அம்பிகையை உடையவன்.
சொல்லாயிருப்பவன் எனலும் பொருந்தும். கணை - திருமாலாகிய அம்பு,
வில்-மேருவில்.
வேத
வேள்வி, (தி.2 ப.13 பா.4) கொல் லானை-கொல்லும் யானை
வினைத்தொகை (உரி-தோல்) உரியான் - தோலைப் போர்த்துக்
கொண்டவன். நல்லான் - சிவன், மங்கல வடிவன்.
|