பக்கம் எண் :

371

1610.



புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.      10
1611.



தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.     11

                         திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக்
கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும்
பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய
பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம்
மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள்.

     கு-ரை: தோகையம்பீலி - மயிற்பீலியாலாகிய வார்கோல்
பொய்மொழிப்பித்தர் - மெய்யுரையாத மயக்கவுணர்வினராய சமணர். பீடு -
பெருமை. அத்தன் - பிதா. அல்லல் - பிறவிப் பிணி முதலிய துன்பங்கள்.
அறுக்க - அறச்செய்ய.

     11. பொ-ரை: குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய்
என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும்
ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த
கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும்
இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

     கு-ரை: தராய்-சீகாழியின் பெயர். நம்பான் - சிவபிரான்.
விண்பொழில்-வானை அளாவிய சோலை. பத்தும் இவை-இப்பதிகத்தை.
பண்கொளப் பாடவல்லார்-பண்ணிசையுடன் பாடும் வன்மையுடையவர்.