பக்கம் எண் :

375

1617.



முத்தினை முழுவயி ரத்திரண் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமி லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை யல்லலே.     6
1618.



காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகை மாவுரித் தோன்மெய்யில்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.      7


     6. பொ-ரை: முத்துப் போன்றவன். முழுமையான வயிரத்திரள்
போன்றவன். மாணிக்கக் கொத்துப் போன்றவன். அசைவற்ற சுடராய்
உலகத் தோற்றத்துக்கு வித்தாய் விளங்குபவன். தேவர்களால் தொழுது
வணங்கப்பெறும் வெண்ணியில் விளங்கும் தலைவனாவான். அவனை
அடைய வல்லவர்கட்கு அல்லல் இல்லை.

     கு-ரை: முத்து, முழுவயிரத்திரள், மாணிக்கத் தொத்து, முதலியவை,
ஒப்பில்லாத கடவுளுக்கு அன்பின் மேலீட்டால், ஒப்புறுத்திச் சொல்லும்
உபசார வழக்கு. ‘பொருள்சேர் புகழ்’ என்ற வள்ளுவர் கருத்தும் ஈண்டு
நினைக்கத்தக்கது. தொத்து - கொத்து, துளக்கம் - அசைவு. இங்கு
அணைதலைக் குறித்தது. அணையா விளக்கு என்க. நமக்கு அல்லல்
இல்லையாம்படி சிவனை அடையும் வன்மையைப் பெறத் தவஞ்செய்தல்
வேண்டும்.

     7. பொ-ரை: மன்மதனை எரித்தவன். கொல்லும் தொழிலுடைய
எமனைச் சினந்து உதைத்தவன். பெரிய கையை உடைய யானையை உரித்து
அதன் தோலை மேனிமீது போர்த்தவன். தேவர்கள் வந்து வணங்கும்
திருவெண்ணியில் விளங்கும் அக்கடவுளை நினைப்பவர்களின் வினைகள்
நீங்கும்.

     கு-ரை: காமன் - பெண்ணாசையை வளர்ப்பவன். மன்மதன்,
காமத்திற்கு அதிதேவதை. காலன் - இயமன். காய்ந்தான் - கோபித்து
எரித்தான் பாய்ந்தான் - பாய்ந்து உதைத்தான். பரிய - பருமையுடைய,
பருத்த. கை - துதிக்கை. மா - யானை, உரி - உரித்ததோல். உரித்தோல் -
உரியதாகிய தோல். உரி:- முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய்த்
தோலை உணர்த்துமிடமும் உண்டு. இங்குத் ‘தோல்’ என்று அடுத்திருப்பதால்
தொழிற்பெயராய் மட்டும்