1627.
|
கலையானே
கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 5 |
1628.
|
ஆற்றானே
யாறணி செஞ்சடை யாடர
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை மேவாவே. 6 |
கு-ரை:
தாயான்+தந்தை . . . ஆயான் - அம்மையப்பர்.
மெய்யுணர்வும் அன்பும் உடைய இருதிறத்தாரையும் நல்லன்பர் என்பது
வழக்கம். கண்ணப்பர் நல்லன்பர்; மெய்கண்டார் மெய்யுணர்வினர்; இருவரும்
அன்பிற் சிறிதும் வேறுபடார். சேயான் - செந்நிறத்தன் எனப் பொருள்
கூறலாம். ஆயினும் முன் அணியான் என்றதனால் சேய்மை (தூரம்)
இடத்தினன் என்பதே பொருத்தம். மேயான் - மேவியவன். மேவா -
பொருந்தா.
5.
பொ-ரை: எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன்.
கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு
உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை
உடையவன். புகழ் மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக்
கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.
கு-ரை:
கலையான்-கலைகளாயும் அவற்றின் ஞானமாயும் உள்ளவன்.
செம்பொற் கயிலாயமலை:- வெண்மைநிறமுடையது. வெண்கயிலை என்றதற்கு
முரணன்று. இமயத்தை மேரு என்றும் மேருவை இயமம் என்றும் நூல்களிற்
கூறுவதுபோல் கூறப்பட்டது. பனிமலையில் தவளகிரியும் காஞ்சனசிருங்கமும்
உண்டு. மலைபவர் - போர்செய்பவர், திரிபுரத்தசுரர். சிலை - மேருவில்.
நிலை - உறையுள்; திருக்கோயில். நிலையானவனுமாம்.
6.
பொ-ரை:நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை
அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில்
வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும்
திருகாறாயிலில் நீறு பூசிய கோலத்தோடு விளங்குபவன். என்று இவ்வாறு
கூறிப் போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.
|