பக்கம் எண் :

383

1631.



பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.   9
1632.



செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.  10


     9. பொ-ரை: இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப்
பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய
மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய
முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று
போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும்.

     கு-ரை: இசை மறையான் - சாமவேதத்தவன். இறையான் -
இறைவன், எங்கும் தங்கியவன், எழில் - அழகு. உறைவான் -
திருக்கோயில் கொண்டவன்.

     10. பொ-ரை: உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும்,
சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர்
என்ற பாவிகளும் கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன்
ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக்
குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு
வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை.

     கு-ரை: செடி - தீநாற்றம். சீவரத்தார்கள் - அழுக்குடையதும்
பிறர்பால் காணாததும் அவர்க்கே வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய
உடையினை உடுத்தவர்கள் (சமணர் முதலோர்) படி - நிலம் கடி -
மணம்.

     குடியாருங் கொள்கை-தலவாசம் புரியும் விரதம். ‘அடியார்
குடியாவர்’ (தி.6 ப.17 பா.6) ‘அடியார்கள் குடியாக (தி.2 ப.43 பா.5);
என்புழிப்படும் பொருளை உணர்க. குற்றம்:- ஆணவம் முதலியன.