பக்கம் எண் :

387

1638.



எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.    5
1639.



மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே.    6


     5. பொ-ரை: ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய
ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச்
சூடியவன். மான் கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து
உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.

     கு-ரை: எறிஆர் - ஒளிபொருந்திய (எறித்தல் - ஒளிவிடல்) வெறி
-மணம். ஆர - நிறைய, மிலைத்தான் - சூடினான். மறி - மான் கன்று.
கொன்றையினோடும் மத்தம், சடை ஆரமிலைத்தானும் மறிக்கையுடையானும்
செறிவானும் ஆகிய சிவனைச் செப்பவல்லார் என முடிக்க.

     6. பொ-ரை: முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு
அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர்
பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள்
வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை
இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.

     கு-ரை: “எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும்
ஈசன் என்னத்தக்க முதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம் என வேதம் சாற்றும்”.
(காஞ்சிப். குமர.16), ‘சொல்லும் பொருளெலாம் ஆனாய் நீயே’ (தி.6ப.78பா.5)
‘இமையோர் ஏத்தும் சொல்தான்காண்’ (தி.6ப.8பா.4) என்பன
வேதவுண்மையாதலின் மொழியான் என்றார், ‘சொல்லானை’ (தி.2 ப.16.பா.9)
எனப் பின் வருதலும் அறிக. நான் மறையும் அம்மறைப்
பொருளுணர்ச்சிக்குக் கருவியாகிய ஆறு அங்கங்களும் மொழிந்தவன்
சிவனே ஆதலால், அவற்றைப் பழியாதவாறு காத்தல் அவன் கடனாகும்.
‘தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன்’ ‘விரித்தவன்
அருமறை’. (தி.3 ப.23 பா,6,7)