பக்கம் எண் :

389

1642.



சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே.       9
1643.



சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.       10


     கு-ரை: இராவணன் முடிபத்தும் தோள் (இருபதும்) கெடுத்த
சிவனை, கேடிலாச்செம்மை - அழிவில்லாத ‘திருநின்ற செம்மை’ எனப்படும்
பேரின்பம். வண்டுகள் மடுத்து (உண்டு) ஆர - நிறைய. பிடித்து ஆர
-சிக்கெனப் பற்றிப் பூரணமாக, பேண - பத்திசெய்ய, பெரியோர்க்கு இதுவும்
இலக்கணம்.

     9. பொ-ரை: வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப் படைக்கும்
நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம்
அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய
தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில்
உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப் பெருமான் திருவடிகளை
ஏத்துவோம்.

     கு-ரை: சொல்லானை, (பார்க்க: தி.2 ப.2 பா.6) தோற்றம் - படைப்பு,
சிருட்டி, கண்டான் - பிரமன். கல்லானை - கற்றுணரப்படாத பெருமையுடைய
சிவனை, கற்றன - கற்றறிந்த சிவகீர்த்தனங்களை, ஓங்க வல்லார் -
திருவருளுயர்ச்சியை அடையவல்லவர். ‘ஓங்குணர்வு’ (திருவருட்பயன், 91),
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி’ ‘ஒருவனே எல்லாம் ஆகி
அல்லானாயுடனுமாவன்’ (சித்தியார், 47) ஏத்தும் - ஏத்துங்கள்.

     10. பொ-ரை: சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண
புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற
செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர்நிலைகள் சூழ்ந்த
திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக் கோடாகக்
கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.