பக்கம் எண் :

390

1644.



கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.     11

                      திருச்சிற்றம்பலம்


     கு-ரை: சற்று - சிறிது. சொல்தேயும்வண்ணம் - பிதற்றுரைகள்
பொருளுறாதனவாய் ஒழியும்வகை, ‘செம்மை உடையானை’ (பா.8. பார்),
வாவி - குளம். பற்று ஆக - உண்மையன்பிற்குரிய தலமாக.

     11. பொ-ரை: கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப் பதியில்
விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய
ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த
வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப்
போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

     கு-ரை: காழியர்கோன் - தோணியப்பர். கருத்து - திருவுள்ளம்.
ஆர்வித்த - நிறைவித்த, ஒவ்வொரு திருப் பதிகமும் ஒவ்வொரு
‘தமிழ்மாலை’ என்னும் உண்மையை இதில் அறியலாம். பண்ணாரப்பாடுதல்
வல்லார்க்குப் பாவம் இல்லை. ‘கண். . . . . . . சீர்’ என்றது ஆசிரியர்
சிறப்பை உணர்த்துகின்றது. கண் - வேணு வனம், கண் - மூங்கில்,
‘கண்ணார் கமழ்காழியர்’ (தி.2 ப.23 பா.11.) என்றது காண்க.

திருஞானசம்பந்தர் புராணம்

அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ் சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடுஞ் சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர் எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்குவேள் விக்குடி உற்றார்.

-சேக்கிழார்.

            பரமததிமிரபாநு

பூம்பாவாய் போதியோ என்றழைத்த பூசுரன்தாள்
நாம்பா லேத்திநயப் பாம்.

-மறைஞானசம்பந்தர்