பக்கம் எண் :

391

17. திருவேணுபுரம்

பதிக வரலாறு:

     137 - ஆவது பதிகத் தலைப்பிற் காண்க.

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 153   பதிக எண்: 17

திருச்சிற்றம்பலம்

1645.



நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.            1
1646.



அரவார் கரவன் னமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.            2


     1. பொ-ரை: பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன
விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர்
உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி
உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: நிலவு - பிறை, ஆகுபெயர். புனல் - கங்கை. நிறைவாள்
-நிறைந்தகொடுமையையுடைய; சாதி அடை. இலகும் - விளங்கும். எழிலார்
- அழகுடையமகளிர். எழுச்சி உடைய உழத்தியருமாம். கடல் முத்துக்கள்
வயலை அடைகின்றன. வெள்ளத்தில் மிதந்த வரலாறு பற்றி, ‘கடலார்
வேணுபுரம்’ என்றார்.

     2. பொ-ரை:பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில்
போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய
உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம்,
மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக் கொண்டு
ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.