பக்கம் எண் :

393

1649.



அரையார் கலைசே ரனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் மிடமாம்
நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.       5
1650.



ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
றளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் நலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.           6


     கு-ரை: காசு அக்கடல் - மணிகளையுடைய அழகிய பாற்கடல்.
இன் நறவவாசக் கமலம் - இனிய தேனையும் மணத்தையும் உடைய கமலம்.
அனம் - அன்னப்பறவை, இடைக்குறை. அன்னம் கமலத்தில் வலிய
அலைகள் வீசுதலால் சிறுதுயில் கொள்ளும்.

     5. பொ-ரை: இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம் போன்ற
நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான்
மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின்
பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள் சூழ்ந்த
வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: அரை ஆர் கலைசேர் அனம் மெல் நடையை -
திருவிடையில் உடுத்தல் பொருந்திய மேகலை முதலிய திருப்புடைவை
சேர்ந்த அன்னத்தினது மெல் நடைபோலும் நடை உடைய திருநிலை
நாயகியை. உரையா - (புகழ்ந்து) உரைத்து. உகந்தான் - உயர்ந்தவன்,
மகிழ்ந்தவன் எனலுமாம். நிரை - வரிசை; நிகழ் - விளங்கிய; உடைவிரை -
உடைதலால் பரவும் மணம் உடைய பொழில் என்றும் இயையும்.

     6. பொ-ரை: ஒளிதரும் பிறையையும், வில்வத்தளி்ர்களையும்
சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில்
நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: பிறையும் தளிரும் உடையான். கூவிளம் - வில்வம்.
நளிரும் - குளிரும். மிளிரும் - விட்டு விட்டு விளங்கும், கண் மிளிரும் -
கண்போல் விளங்கும் என்பதுமாம்.