பக்கம் எண் :

394

           * * * * * * *              7
1651.



ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.         8
1652.



கண்ணன் கடிமா மலரிற் திகழும்
அண்ணல் லிருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணில் திகழும் வேணு புரமே.          9


     7. * * * * * * *

     8. பொ-ரை: இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய
விற்படையை உடைய இராவணனை ’ஆ’ என்று அலறுமாறு அடர்த்தருளிய
சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும்,
குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: ஏவும்படை - குறிதவறாது வினையாற்றும் ஆயுதம். ஆ
என்று அலற - அலறுவோர் ஒலிக் குறிப்புக்களுள் ‘ஆ’ என்பது
தலைமையானது. அஃது ஆஆ என அடுக்கியும் பின் ‘ஆவா’ என்று
உடம்படுமெய் பெற்றும் வரும். அதனைத் திருமுறைகளில் பல இடங்களில்
காணலாம். அடர்த்தான் - தாக்கியவன். மறிமான் - மான்கன்று; மறிகளும்
மான்களும் ஆம். பொழிலின் உள்ளே மானும் மேலே மதியமும் மேவும்
என்க; மதியின் களங்கமுமாம்.

     9. பொ-ரை: திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில்
உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற
இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல்
கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.

     கு-ரை: கண்ணன் - (திருமால்) கரியவன். கடி - மணம். மலர்-தாமரை.
அண்ணல் - பிரமன். இறை - இறைவன். (சிவன்) வண்ணம் -அழகு. சுதை -
சுண்ணம்.