1653.
|
போகம்
அறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் அறியா அடியார் இறையூர்
மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் அறிவார் வேணு புரமே. 10
|
1654.
|
கலமார்
கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே. 11
|
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை
போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும்
பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின்
சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும்
கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.
கு-ரை:
போகம் - சிவானந்த போகத்தை. துவர் - பழுப்பு ஏறிய
ஆடைக்கு ஆகுபெயர். உழல்வார் - திரிவார் (சமணர்சாக்கியர்) ஆகம்
அறியா அடியார் - சிவநிந்தைசெய்யும் பிறமதத்தரை ஏறெடுத்தும் பார்க்காத
சிவனடியார். ஆகம் - உடம்பு. மூகம் - மௌம். மீகம் -வானோர்க்குயர்ந்த
உலகம். (கம் - வான். மீ - மேல்.) மூகம் அறிவாரும் கலை முத்தமிழ்
நூலால் மீகம் அறிவாரும் வாழ்கின்ற வேணுபுரம். அறிவார் - ஞானியர்.
11.
பொ-ரை: மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய
வளங்களை உடையதும், நன்செய் நிலங்கள் நிறைந்ததும் ஆகிய
வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச்
சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம்
புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.
கு-ரை:
கலம் - மரக்கலம். ஆர்தல் - நிறைதல், பொருந்துதல்.
நற்புலம் - (நல் புலம்) நன்செய். நலம் - சிவம், சிவத்தைச் சார்வித்தற்குரிய
ஞானத்தின் தொடர்பு. குலம் - மேன்மை. தமிழ் - இத்திருப்பதிகத்தை.
கூறுவர் - அன்பொடு பாராயணம் செய்வோர். கூர்மையர் - திருவருட்
பெருக்கம் அடைபவர்.
|