1669.
|
தலைதா
னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதின்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 4 |
1670.
|
தவந்தான்
கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 5 |
4.
பொ-ரை: நிலையாக
நெல்லிக்காவுள் எழுந்தருளிய
சிவபெருமான், பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்திய தலைவன்,
தான் விரும்பும் இடமாக மான்கள் திரியும் காட்டைக் கொண்டவன்,
முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக எடுத்தவன்.
கு-ரை:
தலை - பிரமகபாலம். கலை - மான். ஏந்தியதுதலை,
காடிடம் நாடிடமாம். காடாகிய இடம் நாடுகின்ற இடம், நாடாகிய
இடமுமாம். மதில் மூன்றுடைய மலை தான் எடுத்தான் - முப்புரமும்
உடைந்தழிய மேருமலை வில்லை எடுத்தவன். நிலை - உறையுள்.
5. பொ-ரை:
நெல்லிக்காவுள் விளங்கும் சிவபெருமான், நாம்
செய்யத்தக்க தவமாகவும், அடையத்தக்க கதியாகவும் விளங்குபவன்.
நீண்ட சடைமுடி மீது பிறை மதியை உவந்து சூடியவன். மீனக்கொடியை
உடைய மன்மதனைச் சினந்தழித்தவன். உலக மக்கள் செயற்படத்தான்
ஐந்தொழில்களைச் செய்து அனைத்தையும் அழித்து வீடருள்பவனாய்
உயர்ந்து தோன்றுபவன்.
கு-ரை:
தவமும் அத்தவத்தின்பயனாக எய்தும் கதியும் தானே
(சிவனே) ஆவான். வார் சடைமேல் மதியை உவந்தான். உவத்தல் -
மகிழ்தல். சுறவேந்தன்-மீனக்கொடி யுடைய மன்மதன். உரு அழிய -
(உருவிலியாக) வடிவம் எரிந்து சாம்பலாக. சிவந்தான். கோபித்தான்.
சிவந்தான் (ஆகச்) செய்யச் செய்து. செறுத்து - அழித்து, நிவந்தான்
-ஓங்கினான்.
செயற் செய்து
என்னும் பாடத்திற்குச் சிவந்தானது செயலைச்
செய்து என்று கொள்க. செய (ஜெய) - வெற்றி எனலுமாம். செயம்
என்றதன் விகாரமாகக் கொள்க.
|