பக்கம் எண் :

408

1673.



மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 8
1674.



தழல்தா மரையான் வையந்தா யவனும்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.  9


     8. பொ-ரை: நெல்லிக்காவுள் நிலாவிய சிவபெருமான்
உமையம்மையை ஒருபாகமாகப் பிணித்துத் தன்னோடு இணைத்துக்
கொண்டவன். இராவணன் கயிலை மலைமீது பறந்து சென்ற குற்றத்திற்காக
அக்கயிலை மலையைக் கொண்டே வருத்தி அவன் வலிமையைக்
குறைத்தவன். குளிர்ந்த திரண்ட வளையல்களை அணிந்த கங்கையைச்
சடைமேல் அடக்கியவன்.

     கு-ரை: ஒரு பாகத்தில் மாதினைப் பிணித்து மறைத்தான். பிணி
மறைத்தான் - வரிப்புனைபந்து என்புழிப்போலும். மிறைத்தான் -
வருத்தினான். மிகை - மீச்செலவை, குறைத்தான் - அடக்கினான்.
கோல்வளையை - கங்கையை - அன்மொழித்தொகை, கோல் - திரட்சி
வளை - வளையலையுடையவள், நிறைத்தான் - நிறைய அடக்கிக்
கொண்டான்.

     9. பொ-ரை: நெல்லிக்காவுள் எழுந்தருளிய இறைவன் தழல்
போலச் சிவந்த தாமரைமலர் உறையும் பிரமனும், உலகனைத்தையும்
அளந்த திருமாலும் திருவடி திருமுடி அகியவற்றைக் காணமுயன்று
நாண, ஒளிரும் அழல் வடிவாய் நின்றவன். அடியவர்கட்கு
அருளைத்தரும் ஒளி வடிவினன்.

     கு-ரை: தழல் தாமரையான் - தீயைஒக்கும் செந்தாமரையில்
வாழும் பிரமன். வையம் தாயவன் - உலகம் அளந்த திருமால், கழல்
முடி -காலும் தலையும். காணிய - காண்பதற்கு. அழல் - தீப்பிழம்பு.
அடியாருக்கு - யான் எனது என்னும் செருக்கற்றுத் திருவடிஞானம்
பெற்றார்க்கு, அருளாய்ப் பரக்கும் நிழல் - திருஞானமாய்ப்
பரவியுள்ளபேரொளி.