பக்கம் எண் :

413

1683.



தடுமாறு வல்லாய் தலைவா மதியம்
சுடுமாறு வல்லாய் சுடரார் சடையில்
அடுமாறு வல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே.     7
 1684.



பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறு
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் ஒளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே.    8


     7. பொ-ரை: உன்னை உணர்வதில் தடுமாற்றத்தை விளைப்பவனே!
தலைவனே! காதல் வயப்பட்ட மகளிரை நீ சூடிய மதியால் சுடும் படி
செய்பவனே! ஒளிபொருந்திய சடையின்மேல் உலகை அடவந்த
கங்கையாற்றைச் சூடியவனே! அழுந்தையில் மறையவர் கைகளால் தொழ
நீண்டுயர்ந்த பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளாய்.

     கு-ரை: தடுமாறுவல்லாய் - உயிர்கள் உன்னை உணர்வதில்
தடுமாறுதலைச் செய்ய வல்லவனே. ‘உணர்ந்தார்க்கு உணர்வரியோன்’.
என்றது இத்தடுமாற்றத்தை வலியுறுத்தும். தடுமாறுதல் - தட்டுமாறுதல்
என்பதன் மரூஉ வாகக் கொண்டு அஃது ஈண்டுத் திருக்கூத்தைக் குறித்து
நின்றது எனலுமாம். ‘ஆடவல்லாய்’ ‘ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை
ஐயனே’ எனவரும் தேவாரங்களால் உணர்க. மதியம் சுடும் ஆறு -
பிறையால் (காதல்கொண்ட) மகளிரைச் சுடும்வகை. சூடுமாறு என்பதன்
முதற் குறுக்கமுமாம். அடும் ஆறு - கங்கைப்பெருக்கு, நெடுமாநகர்
-நீள்பெருங்கோயில்.

     8. பொ-ரை: பெரியவனே! நுண்ணியனே! பிறை சூடியவனே!
கண்டம் கரியவனே! சுடுகாட்டை உயர்ந்த வீடாகக் கொண்டவனே!
அறிதற்கு அரியவனே! அன்பர்க்கு எளியவனே! அழுந்தையில்
பழிபாவங்கட்கு அஞ்சும் மறையவர் வணங்க நீ சிறந்த மடம் என்னும்
கோயிலில் விளங்குகின்றாய்.

     கு-ரை: கரியமிடறாய் - நீலகண்டனே. சர்வசங்கார காலத்தில்
எல்லாம் அழியுமாதலின், ‘கரிகாடு’ என்றும் அதுவே முதல்வனுக்குக்
கோயிலாதலின் ’உயர்வீடு’ என்றும் அருளினார். ‘கோயில் சுடுகாடு’
பெருமை. சிறுமை, அருமை, எளிமை, எல்லாம் ஆண்டவனுக்குள.
‘வெரியார்’ - பழிபாவங்களை அஞ்சுதலுடைய அம்மறையோர்.