பக்கம் எண் :

415

திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 11

                   திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம் போற்றிப் பாடியதான இத்திருப்பதிகத்தை ஓதி
உணர்ந்தவர்க்கு உண்மை உணர்வு உண்டாகும்.

     கு-ரை: அருஞானம் - எய்தற்கு அரிய திருவருண்ஞானம்.
திருஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தனுடைய, அ:- ஆறனுருபு, பன்மை,
செந்தமிழ்கள் - செந்தமிழ்ப்பாக்கள், உரு ஞானம் - சொரூப ஞானம்,
உண்மையுணர்வு.

திருஞானசம்பந்தர் புராணம்

மன்னு மாமடம் மகிழ்ந்தவான் பொருளினை வணங்கிப்
பன்னு பாடலிற் பதிகஇன் னிசைகொடு பரவிப்
பொன்னி மாநதிக் கரையினில் மீண்டுபோந் தணைந்து
சொன்ன வாறறி வார்தமைத் துருத்தியில் தொழுதார்.

-சேக்கிழார்

பதினொன்றாம் திருமுறை

செல்வம் நிறைந்தவூர் சீரில் திகழ்ந்தவூர்
மல்கு மலர்மடந்தை மன்னுமூர் - சொல்லினிய
ஞாலத்து மிக்கவூர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்குமூர் - ஆலித்து
மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும்
பிரமனூர் வேணுபுரம் பேரொலி நீர்ச் சண்பை
அரன்மன்னு தண்காழி யம்பொற் - சிரபுரம்
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவ மென்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம்.

-நம்பியாண்டார் நம்பி.