பக்கம் எண் :

434

 24. திருநாகேச்சுரம்

பதிக வரலாறு:

     ஆதிசேடன், சிவராத்திரியொன்றில், நான்கு யாமங்களிலும் முறையே
திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், திருநாகைக்காரோணம்
என்னும் நான்கு திருத்தலங்களையும் அடைந்து பூசித்த வரலாறு ‘மாநாகம்
அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி’ என்பதிற் குறித்தருளினார்
அருண்மொழித்தேவர். அவற்றுள் ஒன்றான திருநாகேச்சுரத்தில், காழிப்
பரவலனார் சென்று புரவுவார் பிணிதீர்க்கும் நலம் போற்றிப் பாடியது இது.

பண்: இந்தளம்

ப. தொ. எண்: 160                         பதிக எண்: 24

திருச்சிற்றம்பலம்

1720.



பொன்நேர் தருமே னியனே புரியும்
மின்நேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயநா கேச்சுர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.  1


     1. பொ-ரை: பொன்னை யொத்த மேனியனே, வளைத்துக்
கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன்
வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய
நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய
வினைகள் அழிந்து கெடும்.

     கு-ரை: பொன் ஏர் தரு மேனியன் - பொன்னைப்போல ஒளிரும்
திருமேனியுடையவன். ஏர் - உவமவுருபு. விரை (காவிரி) நீர் -விரைந்தோடும்
(காவிரி) நீர். நீர்வயல் - நீர் நிலவளம் உணர்த்தியவாறு. மன்னே -
இறைவனே. வல்வினை மாய்ந்து அறும் என்றதுபோல இத்திருப்பதிகம்
முழுதும் பாடியருளியதால் இத்தலவழிபாடு நம் பழவினைப் பற்றறுக்கும்
என்பது உறுதியாதலறிக. என - என்று துதிக்க. மேலும் இவ்வாறே கொள்க.