பக்கம் எண் :

438

1728.



நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சுர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.      9
1729.



மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பா வியநா கேச்சுர நகருள்
சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே. 10


பக்கம் 78-9-, 192-3இல் உள்ள விளக்கம் பார்க்க). (தி.2 ப.86 பா.4
குறிப்புரை காண்க).

     9. பொ-ரை: திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற்கொள்ளச்
சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று
நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை
உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன்
இன்புறுவான்.

     கு-ரை: நெடியான் - விக்கிரமன்; திருமால். நேடல் - அடி முடி
தேடுதல். மால் - பெரிய. சோதியன் - தீப்பிழம்பானவன். நடு - நாற்று
நடுகின்ற. மாவயல் - நீள் கழனி. நகரே இடமா உறைவாய் -திருக்கோயிலே
உறையுளாக எழுந்தருளியவனே. இன்பு - இம்மை மறுமை வீட்டின்பம்.

     10. பொ-ரை: அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை
முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின்
பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர
நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப்
போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும்.

     கு-ரை: மலம் - அழுக்கு. பாவிய - பரவிய. மண்டை - உணவு
கொள்ளும் பொருட்டு, விரிந்த பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்டது.
உண்கலம் - உண்ணும் பாத்திரம். பாவியர் - தீவினை யுடையவர். கட்டுரை
- கட்டிச்செல்லும் பொய்ம்மொழி. சிலம்பா - சிலம் பணிந்தவனே, கயிலை
மலையானே.