பக்கம் எண் :

439

1730.



கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சுரத் தரனைச்
சொலமா லைகள்சொல் லநிலா வினையே. 11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில்
சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய
ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச்
சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா.

     கு-ரை: கலம் - மரக்கலம். தலம் - சிவதலம். விரகன் - வல்லவன்.
அறிஞன். சொலல் - சொல்லுதலையுடைய, புகழுடைய. சொல் - புகழ்.
சொல்ல - இசையுடன் பாட, வினை நில்லா என்க.

திருஞானசம்பந்தர் புராணம்

திருநாகேச் சரத்தமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர் பெருகார்வத் தின்புற்றார்.
மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர் பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித் தடங்கரைபோய்ப் புகுகின்றார்.

-சேக்கிழார்.