பக்கம் எண் :

45

விசுவரூபி (விசுவகாரணன், விசுவாந்தரியாமி, விசுவாதிகன்) எனக்
கூறுமிடத்து ‘உலகினை யிறந்து நின்றது அரன்உரு என்பதோரார்.....உலகமாய்
நின்றதோரார்’ என்பன முதலாக வகுத்தும் ‘தேவரில் ஒருவனென்பார்.......
அவன் உருவிளைவும் ஓரார்’ என்றும் அவன் ஆணுருவும் பெண்ணுருவும்
கூடிய வடிவன் (அர்த்த நாரீசுவரன்) ஆகி நிற்றலால் உலகில்
மரஞ்செடிகொடிகள் முதலிய ஓரறிவுயிரும் ஆணுருவும் பெண்ணுருவுமாய்
நிற்கின்றன என்றும் உய்த்துணர விரித்தும் உரைத்தமை காண்க.

இன்னும்,

“இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்
 தமையனெம் மையன்”

என்பது திருவாசகம். இதனைச் சித்தியாரில்,

சிவம்சக்தி தன்னையீன்றும் சத்திதான் சிவத்தை யீன்றும்
உவந்திரு வரும்புணர்ந்திங் குலகுயி ரெல்லாம் ஈன்றும்
பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னி யாகும்
தவந்தரு தன்மை யோர்க்கித் தன்மைதான் தெரியும் அன்றே.

என விளக்குவது அறிக.

     துதி நூல்களாகிய இத்திருமுறைகள் முற்கூறியாங்குச் சாத்திரக் கருவூலமாய்த் திகழ்தல் மட்டுமோ?

தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெல்லாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

என இறைவனது அருள் திறங்களை எடுத்துரைக்கின்றன.

     “அருளாதொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர் இங்கு?”

என இறைவனை அணுகி இரங்கிக் குறையிரப்பத் தூண்டுகின்றன.

“இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
 கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநர கங்கள் வைத்தார்”

என அறங்கூறுகின்றன.