பக்கம் எண் :

46

     இன்னும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்களாம்
அகப்பொருள் துறையும் புலப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் அடக்கி
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்த்” திகழும் இத்தெய்வத்
திருமுறைப் பனுவல்களைக் கற்றாரும் கேட்டாரும் புலனொன்றிக் கரணமும்
அடங்கிச் சிவானந்தம் திளைத்தல் சுவாநுபூதிகம் ஆகும்.

     இப்பெருஞ் சிறப்பினதாகிய நம் புகலியர்கோன் திருவாய்
மலர்ந்தருளிய திருநெறிய தமிழின் இரண்டாம் திருமுறை, குறிப்புரை,
விசேட உரை, உரைநயங்களோடு வெளிவர வேண்டுமென்று திருவுள்ளங்
கொண்டருளினார்கள் கருணையங்கடலாகிய நம் குருமகாசந்நிதானம்
அவர்கள்

     “இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்
கண் விடல்” என்றவாறு திருவுள்ளத்து எண்ணியருளிய படியே, இனிதின்
இயற்றித்தர வல்லுநர் இவரேயென நமது ஆதீனப் புலவரும், ஆதீனப்
பல்கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் ஆகிய புலவர், சித்தாந்த
ரத்நாகரம், வித்துவான், திரு. முத்து, சு. மாணிக்கவாசக முதலியார்
அவர்களுக்கு ஆணையருளினார்கள். அவ்வருளாணைப்படி இரண்டாவது
திருமுறைக்கு அரும் பதவுரை முதலியவற்றை எழுதித்தந்து அரிய உழைப்பின்
திறனைப் புலப்படுத்தி ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் கருணைக்
கடாட்சத்திற்குப் பாத்திரமானார்கள் நமது முதலியார் அவர்கள்.

     அவ்வரும்பெறற் பெரியாரின் புலமையின் திட்ப நுட்ப ஒட்பம்
முதலியவற்றை இத்திருமுறையின் ஒவ்வொரு பதிகத்திலும் காணலாம்.

     தாலி புலாகப்படி ஒவ்வொன்று:-

1. இலக்கியநூற் பயிற்சிக்கு:

     (பதி. 44 திருவாமாத்தூர்) “பிச்சை பிறர் பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சைப் புலானாறு மீருரிவை போர்த்துகந்தான்” என்பதன் உரையில்.
‘கோ-தலைமை, சார-தன்னையே பொருந்தும்படி, யானைத் தோலைப்
போர்த்தும் சாவாமல் மகிழ்ச்சியோடு இருந்தான். ‘யானையின் பசுந்தோல்
பிறர் உடம்பிற் பட்டாற் கொல்லும்’ என்பர் நச்சினார்க்கினியர்,
சீவகசிந்தாமணி, 2787, என்பது.