பக்கம் எண் :

47

2. இலக்கணநூலின் ஆழ்ந்த பயிற்சிக்கு:

     (பதி. 62, திருமீயச்சூர்) “வேகமா நல்லி யானை வெருவவுரிபோர்த்து”
என்பதில் நல்லியானை (நன்மை+யானை) “.....உயர்திணை அஃறிணை
ஆயிருமருங்கின், ஐம்பாலறியும் பண்புதொகும் மொழியும்.....மருவின்
பாத்திய, புணரியனிலையிடை உணரத்தோன்றா” என்ற தொல்காப்பியப்படி
(482) நல்லதாகிய யானையென விரித்துரைத்தற்பாலது நன்னூற் சூத்திரப்படி,
பண்புத்தொகை யென்றல் குற்றமுடையதாகும்’ என்பது.

3. திருமுறைப் பயிற்சிக்கு:

     (பதி. 42. திருஆக்கூர்) “.....இன்மையாற் சென்றிரந்தார்க்
கில்லையென்னாது ஈத்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்றோன்றி
மாடமே” இப்பாசுரப் பகுதியை அப்படியே சேக்கிழார் பெருமான் தமது
நூலில் சிறப்புலி நாயனார் புராணத்தில் (செய்யுள் 1) அமைத்திருத்தல்
காண்க, என்பது.

4. தருக்கநூற் பயிற்சிக்கு:

     தொன்மையும் முதுமையும் வெவ்வேறு என்ற ஆராய்ச்சி, (பதி. 63 - 1
உரை)

5. சித்தாந்த சாத்திரப் பயிற்சிக்கு:-

     (பதி. 78. திருவிளநகர்.) “துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி”
என்பதில் துயர் - பிறவித்துன்பம் துயர்க்கேடு - பாசநீக்கம, துயர்கெடுக
என்றார்க்கு இன்புறுக என்றலும் உட் கோளாம். அவ்வின்பமுத்தி பாசவீடும்
சிவப்பேறுமென இருவகைப்படும் என்பது.

     இன்னும் நுண்ணிதில் திறம் தெரிந்துரைப்பன பலவும் உண்டு.
அவற்றுள் புள்ளிருக்கு வேளூர்ப் பதிகத்தில் முதற் பாசுரத்தில் இருவரும்
வழி்பட்டமையையும், 3,5,7 பாசுரங்களில் சம்பாதி வழி பட்டமையையும்
ஏனைய பாசுரங்களில் சடாயு வழி பட்டமையையும் குறித்தனர் என்பது.

     இவர்களது ஆழ்ந்து அகன்ற பன்னூற் புலமைத்திறனைப் பல
இடங்களில் எழுதியுள்ள விரிவுரைச் செப்பத்தாலும் நன்கு அறியலாகும்.