இதுபோலவே நமது
சித்தாந்த ரத்நாகரம் ஐயா அவர்கள் இன்னும்
தம் ஆராய்ச்சியின் அரியபயன் விளைக்கும் நூல்களை வெளியிட்டு
உலகின் பேருபகாரிகளாகத் திகழ அவர்கட்கு நலன் அனைத்தும் இனிதின்
அருள்க என எனது வழிபடு கடவுளாம் கூத்தப் பெருமானை நாளும்
போற்றுகின்றேன்.
இத்தகைய
சீரிய உரைக்குறிப்பு, விசேடக் குறிப்புரைகளை உலகம்
படித்துத் திருமுறைக் கருத்து உணர்ந்து இருமைப் பயன்களையும்
அடைவதாகுக.
நம்
பெருவாழ்வாகிய தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும்
உரிமையினுகந்த ஒப்பிலாமணியாய் விளங்கும்
தருமை ஆதீனம்
இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய
தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் என்றும் இன்பம்
பெருகும் இயல்பினோடு நீடூழி வாழ்வார்களாகுக. அவர்களது
திருவருளாணை எங்களை ஆள்க.
ஏனைய
திருமுறைகளும் இவ்வியல்பில் சிறப்புற வெளிவருவன ஆகுக.
திருமுறை வெளியீட்டுச்
சிவபுண்ணியத்தைச் செய்யத் தொடங்கி,
முதல் திருமுறை வெளிவருமாறு கருணைகூர்ந்த நமது ஸ்ரீலஸ்ரீ
குருமகாசந்நிதானம் அவர்கள், பதிப்பினும் குறிப்புரை முதலியவற்றினும்
சிறப்புடையதாக இவ் இரண்டாவது திருமுறை இதில் குறித்த சீரியமுறையில்
வெளிவரத் திருவருள் பாலித்தருளினார்கள். அதற்குக் கைம்மாறுண்டோ?
வாழ்க
திருமுறை; வாழ்க உலகம்.
|