பக்கம் எண் :

465

1779.



முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.      5
1780.



வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.      6


பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும்
திருப்புகலியாகும்.

     கு-ரை: மை-நஞ்சின் கறுப்பு. மை தவழும்-மேகம் போலும்
கருநிறம் பரவிய, மா-கரிய. மிடறன்-திருக்கழுத்தை உடையவன்.
மாநடம்-மகாதாண்டவம். பணி-தொண்டு. இணக்கு உறு-இணங்குதல் உற்ற.

     5. பொ-ரை: முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி
அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த
பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச்
சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான
திருப்புகலியாகும்.

     கு-ரை: இரு மூன்றுசமயங்கள், ‘அறுவகைச் சமயம்’ அறுவகைச்
சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்’ (சித்தியார். 2) அக்கு-உருத்திராக்க
மாலை, சங்குமணியுமாம்.

     6. பொ-ரை: மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற்கடலில்
தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான்
மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன்
விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள்
சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.

     கு-ரை: வங்கம்-மரக்கலம், கடலுக்குச் சாதியடை.
அங்கணன்-கருணைக்கண்ணன். அருத்தி-விருப்பம், கொங்கு-மணம், தேன்.
பூந்தாது. அண-அண்ண, வியன் (வியல்)-அகலம், தெங்கு-தென்னை.