பக்கம் எண் :

469

 30. திருப்புறம்பயம்

பதிக வரலாறு:

     திருவிசய மங்கையினின்றும் போந்த ஆளுடைய பிள்ளையார்,
திருவைகாவில் அணைந்துபாடி வழிபட்டு, இத்திருப்புறம்பயத்தைக் கண்டு
மேன்மேல் விருப்புறப்பெற்று, செந்தமிழ் நிறம்பயில் இசையுடன் பாடியது
இத்திருப்பதிகம்.

திருவிராகம்

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 166                               பதிக எண்: 30

திருச்சிற்றம்பலம்

1786.



மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை
நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
திறம்பய னுறும்பொரு டெரிந்துணரு நால்வர்க்
கறம்பய னுரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய். 1


     1. பொ-ரை: புறம்பயம் அமர்ந்தவனே! வீரமும் பயமும் கொண்டு
தன்னோடு போர்மலைந்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை
அறுத்தாய். உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது.
ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர
விரும்பிய முனிவர் நால்வர்க்கு அறமாகிய பயனை உணர்த்தியருளினாய்.

     கு-ரை: மறம்-வீரம், பாவமுமாம். பயம்-அச்சம், மறத்தையும் அச்சம்
விளைவிப்பதையும் உடைய. மலைந்தவர்-(பகைவர்) போராடியவர்;
திரிபுரத்தசுரர்.

     பரிசு-(பெயர்ந்து சென்று அழிக்குந்) தன்மை. அறுத்தனை-அறுத்தாய்.
செம்மை நிறம் அப்பனது. பசுமை நிறம் அம்மையினது, அம்மையப்பர்
நிறம் இரண்டும் கூறப்பட்டன. பயன் உறும் பொருள்-உயிர்க்குறுதியை
அடைவிக்கும் ஆகமாந்தப் பொருள். நால்வர்க்கு-சநகாதியர்க்கு. அறம்பயன்-அறமாகிய பயன். அமர்ந்தோய்-வீற்றிருந்தருளியவனே.
அறுத்தனை உரைத்தனை என்க.