பக்கம் எண் :

470

1787.



விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன்
எருத்திற வுதைத்தனை யிலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய். 2
1788.



விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்.  3


     2. பொ-ரை: புறம்பயத்தில் எழுந்தருளியவனே! சடையை விரித்து
பெருகி வந்த கங்கை வெள்ளத்தைத் தாங்கினாய்; அஃதன்றியும் மிகப்பெரிய
காலனின் பிடரி வருந்துமாறு உதைத்தாய். விளங்கும் அணிகலன் பூண்ட
உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப் பொருத்தி யுள்ளாய்.

     கு-ரை: சடை விரித்தனை; வெள்ளம் தரித்தனை. எருத்து-கழுத்து,
பிடர். இலங்கிழை-விளங்கிய பூண் உடைய உமாதேவியார்.
கருத்தினை-கருத்தை உடையாய்.

     3. பொ-ரை: புறம்பயம் அமர்ந்த பெருமானே! எல்லாமாக விரிந்து
நின்றாய்; நுண்ணியனாகக் குவிந்துள்ளாய்; ஊழிக் காலத்தில் விழுங்கிய
உயிர்களை வினைப்போகத்திற்காக மீண்டும் உடலோடு உலவவிட்டாய்;
உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்துத் திரிந்தாய்.
குருந்தொசித்த திருமால் மோகினியாக வர அவரோடு கூடிப் பிரிந்தும்
புணர்ந்தும் விளையாடினாய்; பிணம்புகும் சுடுகாட்டை விரும்பிமகிழ்ந்தாய்.

     கு-ரை: விழுங்கு உயிர் உமிழ்ந்தனை-இளைப்பாற்றற் பொருட்டு
உடலினின்றும் பிரிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் அவற்றின் வினைகளைக்
கழித்தற்பொருட்டு உடம்பிற் புகுத்தினாய்.

     குருந்து ஒசி பெருந்தகை-குருந்த மரத்தை வளைத்த பெரிய
தகைமையை உடைய மாயன்; திருமால். மோகினி வடிவங்கொண்டு மனைவி
யாகிய வரலாறு காண்க. மயானம் புரிந்தனை-சுடுகாட்டை விரும்பினாய்,
‘கள்ளி முதுகாட்டிலாடி’ ‘கோயில் சுடுகாடு’.