1817.
|
பாக்கியம
தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 10 |
1818.
|
வாசமலி
யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே. 11 |
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை:
நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய
சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு
அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு
வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான
திருவையாறு ஆகும்.
கு-ரை:
பாக்கியம் - நல்வினை. இல்-இல்லாத. ஒன்றும்-சிறிதும்.
பதகர்-பாதகர்.பொதிந்து-மறைந்து, மூடி. நோக்கு அரிய தத்துவன்-
நோக்கிற்கு அரிய மெய்ப்பொருளானவன். படி-பூமி. நீடு-வளர்ந்த.
மாக்கம்-விண். மாகம் மாக்கமென விரித்தல் விகாரம், தத்துவனிடம்
திருவையாறு என்க.
11. பொ-ரை:
மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள
வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி
மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞான
சம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்,
சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.
கு-ரை:
வாசம்-மணம். புகலிமன்னவன்-காழிவேந்தன். மெய்ஞ்ஞானப்
பூசுரன்-திருஞானசம்பந்தன். பூசுரர்-பூ தேவர். நேசம்-அன்பு. பத்தர்-பக்தர்.
நின்மலன்-அழுக்கில்லாதவன். மலரகிதன்.
|