பக்கம் எண் :

488

33. திருநள்ளாறு

பதிக வரலாறு:

     ‘போகமார்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்குந் திருப்பதிகத்தோடு
பாடப்பட்டதாயிருக்கலாம் என்று தோன்றுகிறது.

திருவிராகம்

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 169                              பதிக எண்: 33

திருச்சிற்றம்பலம்

1819.



ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.         1
1820.



விண்ணியல் பிறைப்பிள வறைப்புனன் முடித்த
புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 2


     1. பொ-ரை: இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள்,
வன்னிஇ்லை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது
இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு. சுரபுன்னை முதலிய மரங்களின்
மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.

     கு-ரை: ஏடு-இதழ். இந்து-பிறை. வன்னி-வன்னிப் பத்திரம். மாடு
அவலசெஞ்சடை-பொன்னை ஒவ்வாதென்று அவலம் உறுத்தும் செஞ்சடை.
கோடு-கொம்புகள். ஞாழல்-புலிநகக் கொன்றை, கோங்கெனலுமாம்.
குரவு-குராமரம். வாசம்-மணம், நள்ளாறே மைந்தனிடம் என்பர்; இவ்வாறே
ஏனையவும் ஒட்டுக.

     2. பொ-ரை: வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும்
முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில்
ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு
ஆகும்.