பக்கம் எண் :

491

1825.



நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியர னாமமு முணர்த்திடுநள் ளாறே.      7
1826.



கடுத்துவ லரக்கன்மு னெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பர்அளிபாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 8



     7. பொ-ரை: நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர்.
புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர்.
அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து
வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும்
திருநள்ளாறு ஆகும்.

     கு-ரை: நீதியர்-நீதிவடிவாய் விளங்குபவர். நெடுந்தகையர் -
பெருங்குணங்களுக்கு உறைவிடமானவர். நீள்மலையார்-நீண்ட
திருக்கயிலை மலையை உடையவர். பாவை பாதியர்-அர்த்தநாரீசுரர்.
பராபரர்-மேலவர்க்கும் மேலவர், ‘பராபரன் என்பது தமது
பேராக்கொண்டார்’ (அப்பர் பதி. 310 பா.11) பரமும் அபரமும் ஆயவர்
எனலும் பொருந்தும், ‘பின்தானும் முன்தானும் ஆனான்’ (தி.6 பதி.11. பா.2)
‘முன்னவன்காண் பின்னவன்காண்’ (தி.6 பதி.48 பா.8) ‘முன்பனை உலகுக்
கெல்லாம்’ (தி.4 பதி.74 பா.2) ‘முன்னவன் உலகுக்கு’ (தி.5 பதி.60 பா.8)
‘முன்பாகி நின்ற முதலே போற்றி’ (தி.4 பதி.56 பா.2) ’முன் பின் முதல்வன்’
(தி.4 பதி.90 பா.3) ’முன்னியா நின்ற முதல்வா போற்றி’ (தி.6 பதி.57. பா.5)
’முன்னையார் . . . பின்னையார்’ (தி.5 பதி.16 பா.7) வேள்வி-யாகம்.
நாளும்-நாள்தோறும், காலைதோறும் எனலுமாம்.

     8. பொ-ரை: சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை
எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும்,
வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம்.
வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப்
பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும்.