பக்கம் எண் :

493

1829.



ஆடலர வார்சடைய னாயிழைதன் னோடும்
நாடுமலி வெய்திட விருந்தவனள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய
சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு
எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில்
வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப்
பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா.

     கு-ரை: ஆர்-பொருந்திய. ஆய் இழை-உமாதேவியார்
‘போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்பாகம்
ஆர்த்த. . . அண்ணல்’ என்றதை நினைப்பிக்கும் இடம் இது. காழிச்
சிறப்புணர்த்திற்று. பந்தன்- திருப்பெயர்ச் சுருக்கம். பாடலுடை யாரைப்
பழிகளும் நோய்களும் அடையா என்க.

திருஞானசம்பந்தர் புராணம்

உருகியஅன் புறுகாதல் உள்ளுருகி நனைஈரம்
     பெற்றாற் போல
மருவுதிரு மேனிஎலாம் முகிழ்த்தெழுந்த மயிர்ப்புளகம்
     வளர்க்கு நீராய்
அருவிசொரி திருநயனத் தானந்த வெள்ளம்இழிந்
     தலைய நின்று
பொருவில்பதி கம்போக மார்த்தபூண் முலையாள்என்
     றெடுத்துப் போற்றி.

-சேக்கிழார்.