பக்கம் எண் :

522

38. திருச்சாய்க்காடு

பதிக வரலாறு:

     ‘அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட நம்
பெருந்தகையார்’ தலைச்சங்காடு பணிந்து, திருச்சாய்க்காட்டைச்
சேர்ந்து போற்றி ‘மண்புகார் வான் புகுவர்’ என்ற திருப்பதிகம் பாடித் திருவெண்காட்டை அடைந்து வழிபட்டு மீண்டும் போந்து இத்திருப்பதிகம் பாடியருளியது போலும்.

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 174 பதிக எண்: 38

திருச்சிற்றம்பலம்

1873.



நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவுசாய்க் காடே.  1


     1. பொ-ரை: நாள்தோறும் நியமமாக நீரையும் மலரையும் தூவி
மனம் ஒன்றி வழிபடுவார்க்கு அருள்புரியும் சிவபிரான் உறையும் கோயில்,
மதயானைகளின் தந்தங்களையும், மயிலினது வளமான பீலிகளையும்
வாரித்தவழ்ந்துவரும் நீரினை உடைய காவிரியாறு கடலிடைக் கலக்கும்
இடத்தே அமைந்துள்ளதிருச்சாய்க்காடு ஆகும்.

     கு-ரை: நித்தலும் - நாள்தோறும். நியமம் - தின நியமம் ஆகக்
கொண்டொழுகும் வழிபாடுகள் (ஆன்மார்த்தம்). கடன்களுமாம். நீர் மலர்
தூவல் - புறப்பூசை. சித்த மொன்றல் - அகப்பூசை. தியானம் முதலியன.
பீலி-மயிற்பீலி. சாகரம் - கடல். சிவன்கோயில்-சாய்க்காடே என்க. மேலும்
இவ்வாறே கொள்க.

     காவிரி நீர் நாட்டு வளத்திற்கே பெரிதும் பயன் பட்டுக் கடலில்
சேர்வது மிகச் சிறிதேயாதலின், பாயும் என்னாது ‘மேவும்’ என்றார்.
(விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே விடம் அளித்த
தெனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத
காவிரி) என்றருளினார் சேக்கிழார்.