பக்கம் எண் :

523

1874.



பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.      2
1875.



நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடு மமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலைத்
தாறு தண்கத லிப்புதன் மேவுசாய்க் காடே.      3


     2. பொ-ரை: பண்ணிசையோடு பூதங்கள் பாட நின்று
ஆடுகின்றவனும் வெண்மையான தலையோடுகளை உடைய கரிய காட்டில்
உறைபவனும் ஆகிய வேதியன் கோயில், மேகங்களைப் போலப்
பேரிகைகள் முழங்கச் சோலைகளில் பெரிய மயில்கள் குலாவிஆடும்
திருச்சாய்க்காடு ஆகும்.

     கு-ரை: பண்-பண்ணிசை தலைக்கொண்டு-மேற்கொண்டு பண்பாட
ஆடும் வேதியன் என்க. காட்டின் கருமையும் அங்குள்ள தலைகளின்
வெண்மையும் முரண்டொடை அமைய நின்றன. கொண்டல்-(குணக்கிலிருந்து
வீசுங்காற்றால் உந்தப்பட்ட) மேகம். ஏனை முத்திசைக்காற்றும் முறையே
தென்றல் கோடை வாடை எனப்படும். பேரி-பேரிகை. தண் தலைதடம்-
குளிர்ந்த இடப்பரப்பை யுடைய சோலை (க்குக் காரண)ப் பெயர். தட-
வளைவு எனலுமாம். ‘தட வென்கிளவி கோட்டமும் செய்யும்’ (தொல். உரி)

     3. பொ-ரை: மணம்வீசும் வில்வம். மிக இளையபிறை
ஆகியவற்றோடு கங்கையையும் முடியில் சூடும் அமரர்தலைவனாகிய
சிவபிரான் உறையும் கோயில், சுவை ஊறுகின்ற தெங்கின் காய் மாங்கனி
ஆகியன ஓங்கிய சோலைகளும், குளிர்ந்த பழத்தாறுகளை உடைய
வாழைப்புதர்களும் பொருந்திய சாய்க்காடு ஆகும்.

     கு-ரை: நாறு-மணம் வீசும். கூவிளம்-வில்வம். நாகு இளமதியம்-மிக்க
இளையதாகிய பிறை. அமரர் பிரான்-தேவர்கட்குப் பிரியத்தைச் செய்பவன்.
ஊறு- (சுவை) ஊறுகின்ற. தேங்கனி-‘தெங்கங்காய்’, ‘தெங்கம் பழம்’
என்பவைபோல் இதுவும் அரியதொரு பிரயோகம். தாறு-குலை. கதலி-வாழை
விசேடம். புதல்-புதர். திருச்சாய்க்காட்டின் இயற்கைவளம் உணர்த்தப்பட்டது.