என்ன சான்று வேண்டும்?
இன்னும் பல்லவர் காலத்தும், சோழர் காலத்தும்
தேவாரத் திருமுறைகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. தேவாரம் பாடுவார்க்கு
நிவந்தங்கள் விடுக்கப்பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாகத் தஞ்சைப்
பெருவுடையார்கோயிற் கல்வெட்டு ஒன்று, ஆண்டுத் தேவாரம்
விண்ணப்பித்த 49 பிடாரர்களை (ஓதுவார்களை)ப்பற்றிக் குறிப்பிடுகிறது.
திருவாமாத்தூர்க்
கல்வெட்டு ஒன்றில் குருடர்கள் திருப்பதிகம்
விண்ணப்பம் செய்தமையும் அவர்களுக்குத் துணையாகக் கண் காட்டுவோர்
இருந்து ஆலயம் அழைத்துச் சென்றமையும் கூறப்பெறுகின்றன. என்னே
திருமுறைக் கிருந்த சீர்மை! மக்கள் மனமெல்லாம் அந்த அளவுக்கு
மகிழும்படியாக அருளமுது வாரிவாரி வழங்கியது திருமுறை.
வேதம்
பசு எனவும் ஆகமம் பால் எனவும் திருமுறை நெய் எனவும்
கூறப்படும் பொருளுரையும் திருமுறைப் பெருமையைத் தெற்றெனக் காட்டும்.
ஆசிரியர்கள்:
திருமுறைகளை உலகம்
உய்ய மொழிந்தருளிய பெரியவர்கள்
எளியவர்களா என்ன? அநுபவம் கைவந்த அருளாளர்கள்; சித்தமலம்
அறுத்துச் சிவம் ஆனவர்கள். காணும் பொருளெல்லாம் கண்ணுதலான்
திருவுருவமாக்கண்ட கனிவுள்ளம் படைத்தவர்கள், தமிழ்நாட்டு
வீதியெல்லாம் - ஆலயமெல்லாம் இசை கலந்து தேவார அமுதப்
பாக்களை வாரிவாரி வழங்கினார்கள்.
கடவுளைப்பற்றிய
கவிதையோ கனிந்த உள்ளத்தின் எழுச்சி, அதிலும்
இசைவேறு கலந்துவிட்டால் ஒரே மெய்யுணர்வு தான்! மேம்பாடுதான்!
இதனால்தான், நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்
என்றார்கள் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
திருவானைக்காப்
பதிகத்துக் கடைக்காப்புச் செய்யுளில்,
வெண்ணா
வல்அமர்ந் துறைவே தியனைக்
கண்ணாற் கமழ்கா ழியர்தந் தலைவன்
பண்ணோடு இவைபா டியபத் தும்வல்லார்
விண்ணோர் அவர் ஏத் தவிரும் புவரே |
என்றும்,
|