பக்கம் எண் :

542

1905.







தன்னடைந்தார்க் கின்பங்கள்
     தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம
     புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன்
     மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள்
     பலவடைந்தார் புண்ணியரே.     11

                    திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: தன்னை அடைந்த அன்பர்க்கு இன்பங்கள்
தருபவனும் மெய்ப்பொருளாக விளங்குவோனும், கல்லாலியன்ற மதில்
சூழ்ந்த பிரமபுரத்துள் விளங்கிக் காப்பவனும் ஆகிய பெருமானின் அருளை
மிக இளைய காலத்திலேயே பெற்ற ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப்
பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள், பொன்னையும் போகங்கள்
பலவற்றையும் அடைந்த புண்ணியர் ஆவர்.

     கு-ரை: தன் அடைந்தார்க்கு-தன்னை அடைந்த அன்பர்க்கும்
அறிவர்க்கும். இன்பங்கள்-பெத்தத்திலுள்ள சிற்றின்பங்களும் முத்திப்
பேரின்பமும். தத்துவன்-மெய்ப்பொருள். கன்-கல் (அடைந்த மதில்).
முன்-முற்பிறப்பு, இளமை, சந்நிதி, தந்தைமுதலியோர் எதிர்
என்றபொருளும் குறித்து நிற்றலறிக. வல்லார் எழுவாய். அடைந்தார்
இரண்டும் வினைப்பயனில்லை, புண்ணியர் பெயர்ப்பயனிலை உம்மை
கொடுத்து ஆக்கம் (ஆவர்) வருவித்து முடித்தலுமாம்.

    ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்

போற்று வாரிடர் பாற்றிய புனிதன்
     பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்
     எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனங் காவல்பு ரிந்தென்
     சிந்தை கொள்வதுஞ் செய்தொழி லானால்
மாற்றம் நீரெமக் கின்றுரை செய்தால்
     வாசி யோகுற மாதுநல் லீரே.

                         -நம்பியாண்டார் நம்பி.