பக்கம் எண் :

559

43. திருப்புள்ளிருக்குவேளூர்

பதிக வரலாறு:

     திருமறைச் சண்பையராளி திருக்கண்ணார் கோயிலை ஏத்தினார்,
பிறகோயிலும் இறைஞ்சினார், காவிரிவடபால் குடதிசை நோக்கி
வருவாராய்க், காதல் பெருகப் புள்ளிருக்கு வேளூர்க்கோயிலை
நண்ணினார், ஏற்ற அன்பு எய்த வணங்கினார். இருவர் புள்வேந்தர்
இறைஞ்சி ஆற்றிய பூசையைச் சாற்றி இந்த நன்சொற்பதிகத்தை
அணிவித்தார்.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 179 பதிக எண்: 43

திருச்சிற்றம்பலம்

1928.







கள்ளார்ந்த பூங்கொன்றை
     மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம்
     பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி
     சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம்
     புள்ளிருக்கு வேளூரே.            1


     1. பொ-ரை: தேன்நிறைந்த அழகிய கொன்றைமலர்,
கடுநாற்றத்தை உடைய ஊமத்தைமலர், ஒளிபொருந்திய திங்கள் ஆகியன
உள்ளே அமைந்து விளங்கும் சடையினனும், தள்ளத்தகாத பறவைப்
பிறப்படைந்து சம்பாதி சடாயு எனப்பெயரிய இருவர் வழிபட அவர்கட்கு
அரசனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர்.

     கு-ரை: கள்-தேன், ஆர்ந்த-நிறைந்த. மதமத்தம்-கடு
நாற்றத்தையுடைய ஊமத்தம். முடியையுடைய பெருமானார் என்க. தள்ளா-
தாழ்ந்த பறவைகள் எனக் கருதித் தள்ளிவிடத்தகாத உயிர்களாகிய சம்பாதி
சடாயு என்பர்தாம்; இருவர் புள் ஆனார். சம்பாதியும் சடாயுவும் பறவைப்
பிறப்பை அடைந்து வழிபட்ட வரலாறு. அரையன்-வைத்தியநாதர். இதில்
இருவரையும் உணர்த்தினார்.