1932.
|
கீதத்தை
மிகப்பாடு
மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற
பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால்
வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே. 5 |
1933.
|
திறங்கொண்ட வடியார்மேற்
றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம
முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன்
வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான்
புள்ளிருக்கு வேளூரே. 6
|
5.
பொ-ரை:வேதகீதங்களை
மிகுதியாகப் பாடும் அடியார்கள்
கூடியிருந்து திருவடிகளைத் தொழுமாறு விளங்கி நிற்கும் ஒளி வடிவினனும்,
வெண்மணலைச் சிவலிங்கமாகத் திரட்டி வேதமந்திரங்களை ஓதி சடாயுவால்
ஞானத்தோடு வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம்
புள்ளிருக்குவேளூர்.
கு-ரை:கீதம்-பாட்டு.
மணம் ஒன்றி உரை ஆர்கீதம் பாடநல்ல
உலப்புஇல் அருள் செய்தார். (தி.1.ப.71.பா.8) அடியார்கட்குப் பாதமே குடி.
குடியாகத் தொழ நின்ற சோதி என்க. பரஞ்சோதி - மெய்யொளி, மணலைச்
சிவமாகப் போதத்தால் பாவித்து வேத மந்திரத்தால் வழி பட்டவன் சம்பாதி.
போதம்-ஞானம்.
6. பொ-ரை:சைவத்திறம்
மேற்கொண்ட அடியவர்மீது
தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராமே செய்பவனும்,
சிவதன்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும்
தனது வீரத்தையே பெரிதெனக்கருதி வந்த இராவணனை மறத்தொடு
போரிட்டுப் புறங்கண்ட சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபிரான்
அமரும் இடம் புள்ளிருக்குவேளூர்.
|