பக்கம் எண் :

569

1942.



கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூ ரம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.     4
1943.



பாட னெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூட னெறிநின்றான் சூலஞ்சேர் கையினான் ஆட
னெறிநின்றா னாமாத்தூ ரம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.          5


     4. பொ-ரை: வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும்,
திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதி தேவியின்
அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு
அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து
மகிழும் ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக்
கண்களேயாகும்.

     கு-ரை: கோலி-வலிமை. கொலையுமாம். நாகம்-பாம்பு
‘பையரவல்குல்’. கோல்-திரட்சி. ஆகம்-உடம்பு. மார்புமாம். புல்கி-தழுவி,
புல்கியவள் என்றுமாம். ஆண் ஆகம்-ஆணுடம்பு. ஆள் நாகம்-ஆளுகின்ற
(மலை போன்ற) கொங்கை எனலுமாம். நாகம்-உவமையாகுபெயர். காணாத
கண்களே-குருட்டுக் கண்களே.

     5. பொ-ரை: பாடும் நெறி நிற்பவனும், பசிய தண்மையான
கொன்றை மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய
கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான்
கொண்டருளிய மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார்
மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.

     கு-ரை: பாடல் நெறி-பாடுதலாகிய வழியில். சூடுதல்-அணிதல்.
வேட நெறி-உணர்ந்தறிந்தோர்க்கு உய்வேடமாகும்படி பயன் செய்யும்
மெய்வேடமார்க்கம். (திருமந்திரம் - 1660) வேடமும்-மெய் வேடம்
போலவே பூண்ட பொய் வேடமும், வேடமே, ஒரு வேடமாக
மதிக்கப்படுமோ? படாது. ‘வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என்ன
பயன்? (திருமந்திரம் 240) சிவவேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது
கொண்டொழுகுதலே வேடநெறி. ‘மாலறநேய மலிந்தவர் வேடமும்.......
அரன்’ என்பது சிவஞானபோதம். (சூ. 12).