பக்கம் எண் :

570

1944.



சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்
காவன் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்து மாமாத்தூ ரம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 6
1945.



மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி யாமாத்தூ ரம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.       7


     6. பொ-ரை: பொன்மயமான மேருமலையை வில்லாகக் கொண்டு
அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய
மும்மதில்களை எய்து அழித்தவனும், நெற்றிக்கண்ணனும் எல்லோரும்
சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான்
தேவர்கள் தலை வணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.

     கு-ரை: சாமவரை என்பது மதில்; திரிபுரம் யாவரும்-சாவாதவர்,
பிறவாதவர், தவமே மிக உடையார் மூவாதபல் முனிவர் எல்லோரும்.
(தி.1 ப.12 பா.6.) அகரச்சுட்டு-உலகறிசுட்டு. பண்டறி சுட்டுமாம். தேவர்
தலைவணங்கும் தேவர்-இந்திரன், பிரமன், மால் முதலியோர். தேவர்க்கும்
தேவன்-தேவதேவேசனாகிய சிவபிரான். ‘தேவர்கோ அறியாத தேவதேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற
முதல்வன்’ (திருவாசகம்) அம்மான்-தேவனே என்று முடிக்க.

     7. பொ-ரை: யாவராலும் ஒழிக்கப் படாத கூற்றுவனை ஒழித்து,
மலைமகளைத் தனித்து வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு
பாதியை அளித்து மாதொரு பாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும்,
ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக்
கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர்.

     கு-ரை: மாறாத கூற்றைமாற்றி-ஒழியாத இயமனை ஒழித்து’
மலைமகள்-இமாசல குமாரி (அம்பிகை) வேறாக நில்லாத வேடம்-
அர்த்தநாரீசுவரவடிவம். ஆறாத-தணியாத. கூறாத-புகழ்ந்து வாழ்த்தாத
கூறாத நாக்களே: ஊமைகளே என்றபடி.