பக்கம் எண் :

571

1946.



தாளா லரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளா திரையென்றே நம்பன்ற னாமத்தால்
ஆளானார் சென்றேத்து மாமாத்தூ ரம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.      8
1947.



புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.   9


     8. பொ-ரை: தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை
அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்த நாள் திருவாதிரையாகும்
எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று
வழிபடும் ஆமாத்தூர் அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம்
செவிட்டுச் செவிகள் ஆகும்.

     கு-ரை: தாள்-திருவடி. தலைமகன்-கோமகன். (பா. 2). நாள்
ஆதிரை-திருவாதிரை நாள். நம்பன்-விருப்பிற் குரியவன் (சிவன்) ஆள்-
அடிமை. நாமத்தால்-திருவைந் தெழுத்தால்; திருப்பெயர்களாலுமாம்.
நாமத்தால் ஏத்தும் ஊர் என்க. கேளாச்செவிகளே-செவிட்டுக்காதுகளே
என்றபடி. கேளாமை-சிவபுராணம், சிவகீர்த்தி, சிவநாமம் முதலியவற்றைக்
கேட்டல் இல்லாமை.

     9. பொ-ரை: கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக்
கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும் சிவபிரானது
பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும்
கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின் திருவடிகளை
வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கை யாமோ?

     கு-ரை: புள்-கருடப் பறவை, கமலம்-தாமரை. கைக்கொண்டார்-
ஊர்தியாக் கொண்டமால், ஆசனமாகக் கொண்ட அயன், உள்ளும்
அவன்-தியானிக்கப்படும் அப்பரமசிவனது. ஒப்பு அளக்கும் தன்மையதே-
ஒப்பாக அளவிடப்பெறும் தன்மையை உடையதோ! இல்லை என்றபடி.
அள்ளல்-சேறு. வள்ளல்-எல்லாம் அருளும் பரம் பொருளினும் வேறு
வள்ளல் உண்டோ? கழல்- (தானியாகு பெயர்) திருவடி. பரவா-வாழ்த்தாத.
வாழ்க்கையோ-ஒரு வாழ்வா (மதிக்கக்படு) மோ? வாழ்வன்று என்றபடி.