1948.
|
பிச்சை
பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலானாற வீருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்ற னாமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமு நெஞ்சமே. 10 |
1949.
|
ஆட
லரவசைத்த வாமாத்தூ ரம்மானைக்
கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 11
|
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை:
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர, தன்
தலைமைத்தன்மை கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான புலால்
மணம் வீசும் யானைத் தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய
சிவபிரானது ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம்
நெஞ்சாகுமா?.
கு-ரை:
கோ-தலைமை. சார-(தன்னையே) பொருந்த. கொச்சை-
இகழ்வு. உரிவை தோல்-யானைத்தோல் போர்த்தும். மாயாதிருத்தல்பற்றிக்
கோசார என்றார் (சிந்தாமணி. 2787 உரை பார்க்க) யானையின் பசுந்தோல்
பிறர் உடம்பிற்பட்டால் கொல்லும் என்றுணர்க என்றார் நச்சினார்க்கினியர்,
பின்சாரப் போர்த்துகந்தான், கோசாரப் போர்த்துகந்தான் என்றியைத்துப்
பொருள் உணர்க. கோசாரங் என்று பாடபேதம் உண்டு என்று
காட்டியுள்ளார் மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை. கோ-மலை. யானைக்கு
உவமையாகு பெயராக்கொண்டு. யானை சார எனவும் பொருந்தும். தன்
மாதேவிக்கு அச்சம் ஈந்தான் என்றது யானையை உரித்த வரலாறு பற்றியது.
(பார்க்க: தி.1 ப.75 பா.7.) மலைக்கு மகள் அஞ்ச மதகரியை உரித்தீர் (தி.7
ப.9 பா.1).
11.
பொ-ரை: படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய
ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட
கொச்சைவயம் என்னும் சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய
புகழை உடைய ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை
வல்லவர்க்குப் பாவம் இல்லை.
|