பக்கம் எண் :

57

மாய் விளங்கும் நல்லோர்; எழுத்தாற்றலும், பேச்சுத் திறமையும் மிக்கு, யாவருள்ளங்களையும் எளிதின் ஈர்க்கும் பெரியோர்.

     இத்தகையோரது குறிப்புரை, ஆராய்ச்சி பூர்வமான திருமுறைக்
குறிப்புரை, ‘தெய்வீகத் தமிழ் உலகத்துக்குத் தேவை!’ இதனை
எழுதியதேவை! சான்றோருக்கும் அருள்வளம் ஈந்து அழகுற முற்று
வித்த ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களுக்கும் மிக மிகக்
கடமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்புரை நலங்கள்:

     குறிப்புரையின் நலங்களை நடுவுநிலைமையோடு ஈண்டு ஆராய்ந்து
காணுதல் அறிவுலகத்துக்குப் பெரிதும் பொருந்துமாதலின் என்னுடைய
சிற்றறிவுக்கெட்டியவகையில் அதனைப் பற்றிய மாட்சிகளை ஈண்டுத்
தொகுக்க எண்ணுகின்றேன்.

1. சொல் ஆராய்ச்சி தோன்ற உரையெழுதுதல்:

     ஆசிரியர் திருமுறைக்கு உரையெழுதப் புகுங்கால்
சொல்லாராய்வுணர்வோடு அழகுற எழுதுகின்றார். சொல்லின் பழைய
உருவமும் அதுமருவிய திறமும் மாண்புறக் காட்டுகின்றார். அவ்விடங்கள்
அறிஞர்க்குப் பெருவிருந்தாவன. அவற்றுட் சிலவற்றை ஈண்டு உணரலாம்.

     1. ‘பின்னு செஞ்சடையிற் பிறைபாம்புடன் வைத்ததே’ என்ற 137ஆம்
பதிக முதற்றிருப்பாடலின் உரையில், ‘பாண்பு என்பது பாம்பு என்று
திரிந்தது’ பாண்-பாட்டு; பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு என்று
எழுதியுள்ளார். இது ஒரு அருமையான சொல்லாராய்ச்சி. ‘பு’ விகுதி
உடைமைப் பொருளிலேயே தமிழில் வரும். பொற்பு-பொன்னின் தன்மை
உடையது என்றவிடத்துக் காணலாம்.

     2. ‘உடையாய்தகுமோ இவள்உண் மெலிவே’ (பதி. 154.1.) ‘உரையுலாம்
பொருளாய் உலகுஆள் உடையீர், உடையானை யல்லாதுள்கா
தெனதுள்ளமே’ (பதி. 148. பா. 5.) (பதி.140.) என்பனபோன்று உடையீர்
என்று வரும் இடங்களிலெல்லாம் ஆசிரியர் ‘சுவாமீ’ என்று
உரையெழுதியுள்ளதன் நயம் உணரற்பாலது; வடசொற் பொருளறிந்து ‘சுவாமி
என்பதற்கு உடையவன் என்பது பொருள்’ என்று நம்முன்னோர்க்குக்காட்டும்
ஆசிரியர் அறிவுநலனை என்னென்பது?