பக்கம் எண் :

582

1961.







சூடும் பிறைச்சென்னிச்
     சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங்
     கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா
     நாலூர் மயானத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற்
     பற்றாவாம் பாவமே.            2
1962.







கல்லா னிழன்மேவிக்
     காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா வறனுரையும்
     இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும்
     நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ்
     செல்லாதார் தொன்னெறிக்கே.    3


     2. பொ-ரை: பிறை சூடிய சென்னியுடன், காடு சூழ்ந்த சுடுகாட்டில்
பறை சங்கு ஒலிகளுடன் அழகாக ஆடுபவன் எழுந்தருளிய, பலராலும்
நாடும் சிறப்புக்குன்றாத நாலூர் மயானத்தைப் பாடும் சிறப்புடையோரைப்
பாவம் பற்றா.

     கு-ரை: அழகாக ஆடும் என்க. ஓவா-ஒழியாத. சிறப்போர் பால்-சிறப்புடையோரிடத்தில். பாவம் பற்றாவாம்-பாவங்கள் பற்ற மாட்டாதொழிவனவாம்.

     3. பொ-ரை: கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து, விரும்பி
வந்த புகழ் உடையவராகிய சனகாதி நால்வர்க்கு அன்று எல்லா
அறவுரைகளையும் இன்னருளால் சொன்னவனாய் எழுந்தருளிய நல்லவர்
தொழுது ஏத்தும் நாலூர் மயானத்து இறைவன் புகழைச் சொல்லாதவர்
சைவநெறிக்கண் செல்லாதவர் ஆவர்.

     கு-ரை: காம் உறு-காமம் (அன்பு) உற்ற. எல்லா அறன் உரையும்-
சகல தர்மோபதேசங்களும். சொல்லாதவர்-துதிக்காதவர். தொல்நெறி-
அனாதியான சைவ மார்க்கம்.