பக்கம் எண் :

592

1977.



மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.   7
1978.



தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.   8


     7. பொ-ரை: பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள்
நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை
விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம்
என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி
உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக் காணாது செல்வது
முறையோ?

     கு-ரை: மலிவிழா வீதி-விழாக்கள் இடையறாது நிகழ விளங்கும்
வீதி. ‘வீதிகள் விழவின் ஆர்ப்பும்’. கலிவிழா-திருவருள் எழுச்சியை
விளைக்கும் திருக்கோயில் விழாக்கள். முன்னவை பல்வகைக்களில்
விழாக்கள் பலி-உருத்திரபலி; திசைதோறும் இடுவது. ஒலி-விழாவின்
ஆரவாரம் பங்குனி உத்திர விழாச் சிறப்புணர்த்திற்று.

     8. பொ-ரை: பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின்
தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு
நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு,
பண்ணோடு பாடும் பதினெண்கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை
அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது
முறையோ?

     கு-ரை: தண்ணா வெம்மையைச் செய்யும் என்ற குறிப்பு. சாய்தல்;
தோள்கட்கும் உகத்தல்; (உயர்தல்) தாள்கட்கும் கூறிய திறம் கருதத்தக்கது.
இது சித்திரையில் நிகழ்ந்தது எனக்கொள்ள இடனுண்டு. அட்டமிநாள்விழா
முற்காலத்தது. இக்காலத்தார் சித்திரைப் பௌர்ணமி கொண்டனர்.
பதினெண்கணங்களுக்கும் அட்டமிநாள் விழாவிற்கும் உள்ள தொடர்பு
புலப்பட்டிலது.